நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை அருகே உள்ள தலைமைச் செயலகத்தின் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல தமிழ் ராப் இசைப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு உள்ளிட்ட ஐந்து பேர் காவல் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

நேற்று (21.07.2026) காலை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அறிவு மற்றும் அவருடன் வந்த நான்கு தோழர்கள், நீட் தேர்வுக்கு எதிராக பாடல்கள் பாடியவாறு கோஷங்கள் எழுப்பினர். மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அவர்களை உடனடியாகக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக ஊடகப் பக்கத்தில் அறிவு வெளியிட்டுள்ள விரிவான பதிவில், மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். “டெல்லியில் நீட் தேர்வு மற்றும் அதைச் சுற்றிய முறைகேடுகளுக்கு எதிராக பெருந்திரளாகப் போராடும் மாணவர்கள் மீது நடைபெறும் வன்முறையை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு இந்தப் போராட்டக்குழுவுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், “நீட் தேர்வு மாணவ சமூகத்திடையே பெரும் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக ஏற்கெனவே பல மாணவர்களை நாம் இழந்துவிட்டோம். இன்னும் பலர் இழக்கும் அபாயம் நிலவுகிறது. இது மாணவர்களின் உளவியல் நலனையும், நாட்டின் எதிர்காலத்தையும் கடுமையாகப் பாதிக்கும்” என அறிவு சுட்டிக்காட்டினார். எனவே, தமிழ்நாடு அரசு நீட் தேர்வை முழுமையாக ஒழிப்பதற்கான முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவர்களை மட்டுமே சந்தித்துப் பேசியதாகவும், அந்தச் சந்திப்பில், மாணவர்கள் மீது வன்முறையை ஏவும் போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதையும் பதிவு செய்ததாகவும் தெரிவித்தார். இந்தியா முழுவதும் ஜனநாயக வழியில் நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு தனது முழு ஆதரவையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

முன்னதாக, முதலமைச்சர் விஜயை ‘தெருக்குரல்’ அறிவு சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாகின. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான குரல்கள் தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவம் மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version