இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அணியில் வாய்ப்பு மறுக்கப்படுவது, ஐ.பி.எல் சாதனைகள் மற்றும் 2026 டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது எனப் பல அனுபவங்களைக் கடந்து வந்துள்ள அவர், முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தனக்குக் கூறிய அறிவுரை மற்றும் இஷான் கிஷனுடனான போட்டி குறித்து மனம் திறந்துள்ளார்.
ஜியோஹோட்ஸ்டாருக்கு அவர் அளித்த பேட்டியில், 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் தொடக்கக் கட்டத்தில் தனக்குச் சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், ரோகித் சர்மா தனக்கு ஆறுதல் கூறி, உலகக் கோப்பையில் பிற்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவித்ததாக கூறினார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அந்த நேரத்தில் நான் அவரை நம்பவில்லை. அவர் தனது மனதிலிருந்தோ அல்லது தனது அனுபவத்திலிருந்தோ பேசியிருக்கலாம்; ஆனால், அன்று அவர் பார்த்ததை என்னால் பார்க்க முடியவில்லை. அந்த சோகமான கட்டத்திலிருந்து மீண்டு வர எனக்கு நான்கு அல்லது ஐந்து நாள்கள் ஆனது. நீங்கள் தோற்றுவிட்டீர்கள், அடுத்து என்ன? நீங்கள் படுகுழிக்குச் சென்றுவிட்டீர்கள், அங்கிருந்து உங்களால் மேலே மட்டுமே வர முடியும். நான் என்னை மனரீதியாக மாற்றிக்கொள்ளத் தொடங்கினேன். நான் ஏன் கிரிக்கெட் விளையாடுகிறேன்? எனது நோக்கம் என்ன? என்று எனக்கு நானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டேன்” என்று தெரிவித்தார்.
தனது மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் தனக்குப் பதிலாக இஷான் கிஷன் முன்னிலை பெற்றது குறித்தும் சஞ்சு சாம்சன் வெளிப்படையாகப் பேசினார். “நான் 24, 6, 6, 10 மற்றும் 0 என ரன்களை மட்டுமே எடுத்தபோது, மற்றொரு வீரர் (இஷான் கிஷன்) வந்து நேராக 70 ரன்களுக்கு மேல் அடித்து, தொடரில் சதமும் அடித்தார். அதன் பிறகு அடுத்த போட்டியே நேரடியாக டி20 உலகக் கோப்பைதான். யாராக இருந்தாலும் ஃபார்மில் இருக்கும் வீரருக்குத்தான் முன்னுரிமை அளிப்பார்கள். உலகக் கோப்பை எனக்கு முடிந்துவிட்டது என்பது தெளிவாகிவிட்டது. அடுத்து நடக்க வேண்டியது நடந்துவிட்டது, என்னால் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான், அமைதியாக உட்கார்ந்து கை தட்டுவதுதான்” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடினமான அந்தக் காலகட்டத்தில் தனது மனைவி தனக்கு அளித்த ஆதரவையும், மனநிலையை மாற்றியமைக்க அவர் உதவியதாகவும் சஞ்சு சாம்சன் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
