பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் 1,20,365 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 66,650 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை விட 53,715 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார் விஜய்.

இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெற்றியை எதிர்த்து திமுக  வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கில், வேட்பு மனுவில்  முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி இருப்பதாகவும். சொத்துக்கள் விவரங்கள் மற்றும் வழக்குகள் விவரங்கள் முறையாக தெரிவிக்கவில்லை என்பதால் விஜய்யின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என   தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என, ஆர்.டி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தெரிவித்தார்.

இதையடுத்து, முதலமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version