போதைப் பொருள் ஒழிப்பு, சட்டம், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரின் பதக்கங்களை முதலமைச்சர் விஜய் வழங்கி கௌரவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பட்டு வேஷ்டி சட்டையுடன் பங்கேற்ற முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, காவல்துறை மற்றும் பல்வேறு படைப் பிரிவினரின் மிடுக்கான அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார்.

 

ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவல் அதிகாரிகள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினர் என மொத்தம் 665 பேருக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கினார். பின்னர், பதக்கங்கள் பெற்ற காவல் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 

இந்தநிகழ்ச்சியில் காவல்துறை வாகனங்களின் சேவையையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். கடலோர பகுதி காவல் நிலையங்களுக்காக 42 மகேந்திரா தார் ராக்ஸ் கார்கள், 96 ஹோண்டா யுனிகார்ன் இருசக்கர வாகன சேவையையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதி தீவிரப்படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. தீவிரவாதிகளிடம் இருந்து பணயக் கைதிகளை கமாண்டக்கள் மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், மோப்ப நாய் பிரிவுகளின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் விஜய்க்கு மோப்ப நாய் ராக்கி பூங்கொத்து கொடுத்துச் சென்றது. பின்னர், கண்கவர் பைக் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. பைக்குகளில் தலை கீழாகவும், பல்வேறு வடிவங்களிலும் வீரர்கள் நின்று சாகசம் செய்தனர்.

தமிழக காவல்துறை சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நினைவு பரிசு வழங்கி கவரவித்தார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிளம்பிய முதலமைச்சர் விஜய், சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார். அப்போது முதலமைச்சருக்கு மக்கள் கையசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version