நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை அடையாறில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் பள்ளிக்கல்வி மற்றும் செய்தி தொடர்புத்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் நடிகர் பிரபு உள்ளிட்ட சிவாஜி கணேசன் குடும்பத்தினர் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு,  சிவாஜி கணேசனின் 25 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்த வந்தவர்களுக்கும், தங்கள் வேண்டுகோளை ஏற்று வந்த அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்தார்.

2028ம் ஆண்டு சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா வருவதாகவும், அந்த விழாவினை முதலமைச்சர் விஜய் முன் நின்று நடத்துவதாகக் தெரிவித்துள்ளதால், அந்த நாளுக்காக காத்திருப்பதாகக் கூறினார்.

 

அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  கலைத்துறையின் பிதாமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எங்கள் கொள்கை தலைவர் காமராஜரின் பக்தர். முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்நாள் நண்பர் என்றார். பாரதியார், வ.உ.சி, கர்ணன் போன்றோரை நேரில் பார்த்ததில்லை. ஆனால் அவர்களை கண்ணெதிரே காட்டியவர் சிவாஜி அய்யா. சிவாஜி அவர்களின் நூற்றாண்டு, பொன்னெழுத்தக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

வரலாறும், சினிமாவும் பெருமை கொள்வது போல் சரித்திரம் வியக்கும் வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் மிகப்பெரிய விழாவாக  சிவாஜி கணேசனின் நூற்றாண்டு நடத்தப்படும்.  இது பெருமையல்ல. இது எங்கள் கடமை என்றார்.

தொடர்ந்து  நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பூவுலகம் இருக்கும் வரை அனைத்து நடிகர்களுக்கும் ஏதோ ஒரு சிவாஜியின் உடல்மொழி இருக்கும். சிவாஜி கணேசன் நடிப்பிற்கு இலக்கணமாக இருக்கிறார்.  அவரது படங்கள் எல்லாம் காவியங்கள் காப்பியங்கள். இந்த நிமிடம் வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version