நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் Cockroach Janta Party (CJP) நடத்திய “சன்சத் சலோ” (Sansad Chalo) பேரணிக்குப் பிறகு ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா டெல்லி ராம் மனோஹர் லோகியா (RML) மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதனைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த போராட்டக்காரர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, சிஜேபி தலைவர் அபிஜீத் திப்கே, போலீசாரால் “மிகக் கொடூரமாக தாக்கப்பட்ட” தனது ஆதரவாளர்களிடம் மன்னிப்பு கோரியதுடன், போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.
மத்திய அரசுடன் சிஜேபி நடத்திய முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பில், கட்சியின் செய்தித் தொடர்பாளர்களான அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோரை ஜே.பி. நட்டா சந்தித்தார். அப்போது, சிஜேபி முன்வைத்த கோரிக்கைகள் குறித்து மத்திய அரசின் உயர்மட்ட தலைமையுடன் ஆலோசனை நடத்தப்படும் என அவர் உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் அண்மைக் காலங்களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையால் பலர் காயமடைந்தனர். போராட்டம் நடைபெற்ற நேரத்தில் புதுடெல்லி மாவட்டத்தில் மொபைல் இணைய சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
“சன்சத் சலோ” பேரணியில் போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீசார் அளவுக்கு மீறிய பலத்தை பயன்படுத்தியதாக சிஜேபி குற்றம்சாட்டியுள்ளது. இதில் பல மாணவர்கள் காயமடைந்ததாகவும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அவர்களின் மனைவி கீதாஞ்சலி ஜே. ஆங்மோ போலீசாரால் தள்ளுமுள்ளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், ஜந்தர் மந்தரில் அமைக்கப்பட்டிருந்த போராட்ட மேடையை போலீசார் அகற்றிய பின்னரும், கேரளா ஹவுஸ் அருகே தர்ணா போராட்டத்தை சிஜேபி தொடர்ந்தது.
போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொள்வதாக அறிவித்துள்ளார். போலீஸ் நடவடிக்கையே தனது உண்ணாவிரதத்தை நீட்டிக்க காரணமாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
