பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம், திடீரென கல்லெறி மற்றும் தடிதடி மோதலாக மாறியதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. இந்த இருதரப்பு மோதலால் குன்னம் பேருந்து நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விசிக குன்னம் மாவட்டச் செயலாளர் அன்பானந்தம் என்பவர், திமுக தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, எம்பி கனிமொழி மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களைப் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து, குன்னம் பேருந்து நிலையப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவினர் திரண்டனர். அதே நேரத்தில், விசிகவினரும் அங்கு மற்றொரு ஆர்ப்பாட்டத்திற்காக கூடியதால் இருதரப்பிற்கும் இடையே திடீர் பதற்றம் தொற்றிக் கொண்டது.

சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்பதால் இருதரப்புமே ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது எனப் போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்கப் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், அங்கு நின்றிருந்த திமுகவினர் தங்களது கட்சித் தலைவர்களை வாழ்த்தி முழக்கமிட்டனர். இதற்குப் போட்டியாக விசிகவினரும் கோஷங்களை எழுப்பியதால் இருதரப்புக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்த முயன்ற போதிலும், ஆத்திரமடைந்த இரு கட்சியினரும் சாலையோரம் கிடந்த கற்கள் மற்றும் கட்டைகளை எடுத்து பரஸ்பரம் வீசித் தாக்கத் தொடங்கினர். இந்த திடீர் வன்முறையால் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மோதலால் குன்னம் பேருந்து நிலையப் பகுதியில் ஒட்டுமொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிவிரைவுப் படை போலீசார் வன்முறையில் ஈடுபட்ட திமுக மற்றும் விசிகவினரை அடித்து விரட்டி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க அங்கு தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version