மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், மாநிலங்களவையில் மேகதாது அணை தொடர்பாக மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் இணை அமைச்சர் அளித்த பதிலை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், 2018 பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்தக் கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்கு கீழ்நிலை மாநிலங்களின் (Lower Riparian States) ஒப்புதல் அவசியம் என்று வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை என்ற அமைச்சரின் விளக்கம் ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பதில் தற்போதுள்ள சட்ட நிலை மற்றும் கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதல் தொடர்பான நிலைநிறுத்தப்பட்ட சட்டக் கோட்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, கர்நாடகா – ஆந்திரப் பிரதேசம் இடையேயான அலமட்டி அணை வழக்கில் (State of Karnataka vs State of Andhra Pradesh) அரசியல் சாசன அமர்வு வழங்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை முதலமைச்சர் மேற்கோள் காட்டியுள்ளார்.

அந்தத் தீர்ப்பின் 100-வது பத்தியில், “கீழ்நிலை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதலும், மத்திய அரசின் அனுமதியும் இல்லாமல் கர்நாடக மாநிலம் குறிப்பிட்ட உயரம் வரை அணை கட்ட அனுமதிக்க முடியாது” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள XVIII-வது பிரிவை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது என்றும், அதன்படி ஒவ்வொரு மாநிலமும் தன் எல்லைக்குள் நீரை நிர்வகிக்கலாம் என்றாலும், அது நடுவர் மன்றத்தின் உத்தரவுக்கு முரணாக இருக்கக் கூடாது என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, காவிரி நீரின் ஒழுங்குபடுத்தப்பட்ட ஓட்டத்தை பாதிக்கும் வகையிலான எந்த புதிய திட்டமும், குறிப்பாக மேகதாது அணைத் திட்டமும், தமிழ்நாடு உள்ளிட்ட கீழ்நிலை மாநிலங்களின் உரிமைகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதித்து மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version