சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி மற்றும் சமூக நீதி மாணவர் விடுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன் அறிவிப்பின்றி நடைபெற்ற இந்த ஆய்வில், மாணவர்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். விடுதியில் உணவுப்படி வெறும் ரூ.50 மட்டுமே வழங்கப்படுவது, உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும், உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும், ஊக்கத்தொகை பல மாணவர்களுக்கு கிடைக்கவில்லை, தங்கும் வசதிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாணவர்கள் தொடர்ந்து முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் விடுதிக்குச் சென்று மாணவர்களின் தங்கும் அறைகள், சமையலறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நேரில் பார்வையிட்டார். பின்னர் மாணவர்களுடன் நேரடியாக உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, எதிரே அமைந்துள்ள சமூக நீதி மாணவர் விடுதியிலும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள மாணவர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு, “முதலமைச்சரின் இந்த திடீர் ஆய்வு நல்ல நிர்வாகத்தை உறுதி செய்யும் முயற்சியாகும். மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிவது இதுவே முதல் முறை. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அளிக்கும் தகவல்களை மட்டும் நம்பாமல், நேரடியாக மாணவர்களிடம் சென்று உண்மை நிலையை அறிய விரும்பும் முதலமைச்சராக அவர் செயல்படுகிறார். இந்த திடீர் ஆய்வுகள் இனியும் தொடரும்” என்றார்.
அமைச்சர் சம்பத்குமார் பேசுகையில், “ஆய்வுக்கு வெறும் பத்து நிமிடங்களுக்கு முன்புதான் எங்களுக்கே தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அதிகாரிகளுக்கு தெளிவான உத்தரவு வழங்கியுள்ளார். அடுத்த முறை ஆய்வுக்கு வரும்போது மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம்” என்றார்.
