இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஆளும் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக 56 வயதான ஆண்டி பர்ன்ஹாம் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், அவர் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
கடந்த மாதம் கெர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், கட்சியின் தலைவர் பதவிக்கு ஆண்டி பர்ன்ஹாமைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை. மேக்கர்பீல்டு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டி பர்ன்ஹாம், கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தின் 7-வது பிரதமராக அடுத்த வாரம் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார். தற்போதைய பிரதமர் ஸ்டார்மர் தனது ராஜினாமா கடிதத்தை மன்னர் மூன்றாம் சார்லசிடம் முறையாக வழங்கிய பிறகு, புதிய அரசு அமைக்க பர்ன்ஹாமிற்கு மன்னர் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுப்பார்.
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தனது முதல் உரையை நிகழ்த்திய ஆண்டி பர்ன்ஹாம், “நாங்கள் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை அளிக்கப் போகிறோம். கெய்ர் ஸ்டார்மர் அமைத்த அடித்தளத்தின் மீது நின்று தலைமை தாங்க நான் தயாராக இருக்கிறேன். பிரிட்டனை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்ல இருக்கிறேன். எங்கள் முன்னுரிமைகள் மற்றும் முடிவுகள் எவ்விதத் தயக்கமும் இன்றி ‘தொழிலாளர்’ கொள்கை சார்ந்ததாகவே இருக்கும்” என்று உறுதியளித்தார்.
மேலும், கடந்த 2024 பொதுத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தங்களுக்குக் கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு இது எனக் குறிப்பிட்ட அவர், உள்ளாட்சி மற்றும் சமூகக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கும், உள்ளூர் வணிகங்கள், பப்கள் மற்றும் கடைகளை மேம்படுத்தவும், பிராந்தியங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கப்போவதாகவும், மீண்டும் தொழில்மயமாக்கலை தீவிரப்படுத்தப் போவதாகவும் தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
