முதலமைச்சரின் ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி, மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதலமைச்சராக ச.ஜோசப் விஜய் பதவியேற்றபின்னர் அவருக்கு செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோர் தனிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவரவர் கவனிக்கும் துறைகளும் அண்மையில் ஒதுக்கப்பட்டன.
இதனிடையே முதலமைச்சரின் அரசியல் விவகாரங்களை கவனிப்பதற்காக, அவரது ஆஸ்தான ஜோதிடரான ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். இதற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலாத விஜயகாந்த் எம்.எல்.ஏ சட்டப்பேரவையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார். விஜயின் ராஜகுரு என்றால் தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளட்டும் எனவும் சாடினார். இதே போல் அரசியல் களத்தில் பலரும் இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவரது நியமனம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் சிறப்பு ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் ஜான் ஆரோக்கியசாமி அரசியல் வியூக வகுப்பாளர் ஆவார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதில் இருந்தே விஜய்யுடன் பயணித்து அவருக்கான ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ஜான் ஆரோக்கியசாமி, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியிலும், லயோலா கல்லூரியிலும் கல்வியை முடித்திருக்கிறார். பொதுமக்கள் தொடர்பு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்ற இவர், JPACPersonal என்கிற நிறுவனத்தை நடத்தி வருவதோடு, இதன்வழியாக தவெகவுக்கான பணிகளைச் செய்துவருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 2016இல் பாமகவுக்குவும், 2021ல் நாதகவுக்கும் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்திருக்கிறார். இதேபோல் அதிமுக ஆட்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் பணி செய்திருக்கிறார்.
ஒரு காலத்தில் ,ரஜினி கட்சி தொடங்க நினைத்தபோது, ஜான் ஆரோக்கியசாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின… இதன் பின்னர் தவெக தலைவர் விஜய்யுடன் பயணிக்கத் தொடங்கியவர், இன்று முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முதலமைச்சரின் மற்றொரு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் விஷ்ணு ரெட்டி, விஜய்யின் நெருக்கமான நண்பராக மட்டுமின்றி, தமிழக வெற்றிக் கழகத்தில் மிகவும் முக்கியமான மற்றும் செல்வாக்கு மிக்க நபராவார். ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் மற்றும் கிரானைத் தொழிலதிபரான விஷ்ணு ரெட்டி, கட்சியின் நிதி தொடர்பான விஷயங்களில் பங்களித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆட்சி அமைப்பதற்காக கவர்னரிடம் கடிதம் கொடுக்கச் சென்றபோது விஜய்யுடன் விஷ்ணு ரெட்டியும் சென்றுள்ளார். மொத்தத்தில் தனது மிக நெருக்கமான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோரை தனது ஆலோசகராக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நியமித்திருக்கிறார்.
மு.செய்யது
