சென்னை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இந்தக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் தங்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை முன்வைத்தனர். மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் நலன் சார்ந்த பல முக்கிய பரிந்துரைகளும் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, சில சங்கங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு திட்டத்தில் வாரத்திற்கு ஒரு முறையாவது சிக்கன் பிரியாணி சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த புதிய கோரிக்கை குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

முதலமைச்சருடன் விரைவில் ஆலோசித்து, நிதி ஒதுக்கீடு, சாத்தியக்கூறுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, சத்துணவு பட்டியலில் சிக்கன் பிரியாணியை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இது மாணவர்களிடையே வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துதல், ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) தகுதி மதிப்பெண்களைக் குறைத்தல், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத் திருத்தம், பழைய ஊதிய முறையை மீட்டெடுத்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை சங்கங்கள் எடுத்து வைத்தன. உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல் உள்ளிட்ட பாடங்களில் தற்போது 11,773 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த வேண்டும் என சங்கத் தலைவர் செந்தில் குமார் வலியுறுத்தினார்.

அமைச்சர் ராஜ்மோகன், சங்கங்கள் சமர்ப்பித்த அனைத்து கோரிக்கை மனுக்களையும் பிரத்யேக மென்பொருள் மூலம் டிஜிட்டல் மயமாக்குவதாக அறிவித்தார். கோரிக்கைகள் வகைப்படுத்தப்பட்டு, எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் தொடர்புடைய சங்கங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும். இந்த ஆலோசனைக் கூட்டம் ஆசிரியர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version