தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘கரூர் மக்கள் சந்திப்பு கூட்டம்’ அட்லஸ் மைதானத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கு சுமார் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டார்.
இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் நிகழ்ச்சி தளத்திற்கு வந்தார். அவரை தமிழக அமைச்சர்களான புஷ்பி ஆனந்த், ஆதவ் அர்ஜூன், செங்கோட்டையன், அருண் ராஜ் உள்ளிட்டோர், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
மேடைக்கு வந்ததும் தொண்டர்களும் ரசிகர்களும் ‘விஜய்! விஜய்!’ என முழக்கமிட்டு பெரும் ஆரவாரம் செய்தனர். நிகழ்ச்சி தொடங்கியதும் அமைச்சர் ராஜ்மோகன் முதலமைச்சர் விஜயை வரவேற்று உரையாற்றினார். அதன்பின் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி திருவள்ளுவர் சிலையை முதலமைச்சருக்கு பரிசளித்து வரவேற்புரை நிகழ்த்தினார். கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் முதலமைச்சர் விஜய்க்கு வெள்ளி வாள் பரிசளித்து உரையாற்றினார். தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்து இரு மாதங்கள் முடிவடைந்த நிலையில், முதலமைச்சர் விஜய் கரூருக்கு முதல் முறையாக வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர். மக்கள் பிரச்சினைகள், அரசின் சாதனைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் உரையாற்ற உள்ளார். கரூர் மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு, த.வெ.க. அரசின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

