கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு விழாவில் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்கள் விழா அரங்கத்திலிருந்து காவல்துறையினரால் வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அனுமதியுடன் பாஸ்கள் பெற்று வந்த செய்தியாளர்கள், இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விழா மேடைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதோடு, அரங்கத்திற்கு வெளியே கூட நின்று செய்தி சேகரிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், செய்தியாளர்கள் பயன்படுத்திய பாதையை தகரத் தகடுகளால் முழுமையாக அடைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை முதலமைச்சரின் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. செய்தியாளர்களின் வருகை முதல்வருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும் என்ற தகவல் திடீரென வந்ததாகவும், அதன் அடிப்படையில் இத்தகைய கெடுபிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
செய்தியாளர்கள் தங்கள் அடையாள அட்டைகளையும், மாவட்ட ஆட்சியர் வழங்கிய பாஸ்களையும் காட்டி, “அரசு விழாவுக்கு அதிகாரபூர்வ அனுமதி பெற்று வந்த நாங்கள் ஏன் வெளியேற்றப்பட வேண்டும்? கலெக்டரின் பாஸுக்கு மதிப்பில்லையா? முன்பெல்லாம் முதல்வரை நெருக்கமாகப் பார்த்து செய்தி சேகரித்திருக்கிறோம். திடீரென இப்படி ஒரு கட்டுப்பாடு ஏன்?” எனக் கேள்வி எழுப்பினர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவர்களிடம், “நான் போலீசாருடன் பேசிவிட்டு வருகிறேன்” எனக் கூறி சென்றார். ஆனால், அவர் மீண்டும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் ஊடக சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசு விழாக்களில் ஊடகவியலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவது, ஜனநாயகத்தின் நான்காவது தூணுக்கு அழிவு ஏற்படுத்தும் செயல் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

