தமிழக அரசின் உயர் நிர்வாக அமைப்பில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் கட்டுப்பாட்டை இன்னும் வலுப்படுத்தும் வகையில், மனித வள மேலாண்மைத் துறை சார்பில் முக்கியமான நிலையான வழிகாட்டுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 29 ஆம் தேதியிட்ட இந்த உத்தரவு, தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மிக முக்கியமான இரண்டு பதவிகளான தலைமைச் செயலாளர் மற்றும் மாநில காவல் துறைத் தலைவர் (டிஜிபி) நியமனங்களில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த ஆளுநரின் முன்அனுமதி பெறும் நடைமுறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இனி இந்த இரு உயர் பதவிகளுக்கான நியமன உத்தரவுகளை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே மாநில அரசு நேரடியாகப் பிறப்பிக்க முடியும். 1978 ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசுப் பணி விதிகளின்படி நடைமுறையில் இருந்த நியமன முறையை இந்த உத்தரவு மாற்றியமைத்துள்ளது. மேலும், 2022 முதல் 2025 வரையிலும், கடந்த ஜனவரி வரையிலும் பிறப்பிக்கப்பட்ட அனைத்து பழைய நிலையான உத்தரவுகளையும் இது ரத்து செய்துள்ளது.

இந்த மாற்றத்தின் விளைவாக, அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அகில இந்திய சேவை அதிகாரிகள் (ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ்), கூடுதல் செயலாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரின் நியமனங்கள், மாறுதல்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான அனைத்துக் கோப்புகளும் அமைச்சர்கள் மட்டத்தில் முடிவு செய்யப்படக் கூடாது.

அவை அனைத்தும் நேரடியாக முதலமைச்சரின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகளில் விசாரணை தொடக்கம் முதல் விளக்கம் கேட்கும் நோட்டீஸ் மற்றும் இறுதி உத்தரவு வரை அனைத்து நிலைகளிலும் முதலமைச்சரின் நேரடி ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நிதி நிர்வாகத்திலும் இதே போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடர் செலவினங்களுக்கு ₹2 கோடிக்கு மேலும், தொடராச் செலவினங்களுக்கு ₹5 கோடிக்கு மேலும் முதலமைச்சரின் நேரடி நிதி அனுமதி அவசியம். குறைந்த அளவிலான ஒதுக்கீடுகள் மற்றும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் பெரும்பாலான திட்டங்களுக்கு மட்டுமே நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிதித் துறைக்கும் பிற துறைகளுக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் இறுதி முடிவிற்காக முதலமைச்சரிடமே கொண்டு செல்லப்படும்.

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக 1 ஹெக்டேருக்கு மேற்பட்ட நில கையகப்படுத்துதல் மற்றும் மாநில-மத்திய அரசுகளுக்கு இடையேயான நிலப் பரிமாற்றங்களுக்கு முதலமைச்சரும் வருவாய்த் துறை அமைச்சரும் இணைந்து கூட்டு ஒப்புதல் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழக நிர்வாக அமைப்பில் முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கை, மாநில சுயாட்சி மற்றும் நிர்வாகச் சுதந்திரத்தை உறுதி செய்யும் முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் முக்கிய முடிவுகள் அனைத்தும் முதலமைச்சரின் ஒப்புதலுடன் மட்டுமே எடுக்கப்படும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version