தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும், ஏற்கனவே இயங்கிவரும் நிறுவனங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதிலும் மாநில அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், முதலமைச்சர் விஜய் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளார்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்த அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ளும் வகையில், அவர் தமிழ்நாடு முழுவதும் தொழில் முதலீடுகளை நேரடியாக ஆய்வு செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளார். இதன் முதல் கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர்-ஒரக்கடம் தொழில் மண்டலத்தில் அமைந்துள்ள பிரமாண்ட உற்பத்தி ஆலைகளுக்கு அவர் நேரில் சென்று அதிரடி ஆய்வு நடத்துகிறார். இந்தப் பகுதி தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் உற்பத்தி மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

மோட்டார் வாகனத் துறை, பொறியியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளில் பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன. ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இப்பகுதி முக்கியப் பங்காற்றுகிறது. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, முதலமைச்சரின் ஆய்வு இருங்காட்டுக்கோட்டையில் உள்ள செயிண்ட்-கோபைன் இந்தியா நிறுவனத்தின் வேர்ல்டு கிளாஸ் காம்ப்ளக்ஸ் உற்பத்தி மையத்தில் தொடங்குகிறது.

உலகப் புகழ்பெற்ற இந்த கண்ணாடி ஆலையில் நடைபெறும் உற்பத்தி நடைமுறைகளையும் தொழில்நுட்பங்களையும் அவர் பார்வையிடுவார். அதைத் தொடர்ந்து, மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் திட்ட அலுவலகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், தொழிற்பேட்டை வசதிகள் மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடத்துவார். பின்னர், ஒரக்கடத்தில் உள்ள டெய்ம்லர் பஸ்சஸ் இந்தியா உற்பத்தி ஆலைக்குச் சென்று பேருந்து தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்வார்.

இறுதியாக, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள நிசான் கார் உற்பத்தி ஆலையில் வாகன உற்பத்தி திறன் மற்றும் ஏற்றுமதி சாத்தியக்கூறுகள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவார். அண்டை மாநிலங்களின் போட்டிக்கு மத்தியில் முதலீட்டாளர்களிடையே நிலவும் தயக்கத்தை நீக்கும் வகையில் இந்த நேரடி களப்பயணம் அமைந்துள்ளது.

தொழில் அதிபர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி, உள்கட்டமைப்புத் தேவைகளை விரைவாகப் பூர்த்தி செய்யவும், நிலுவையில் உள்ள விரிவாக்கத் திட்டங்களை துரிதப்படுத்தவும் இது உதவும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு தொழில்துறையினருக்கு உறுதியாக ஆதரவு தருகிறது என்ற செய்தியை சர்வதேச முதலீட்டாளர்களுக்கு உணர்த்தும் முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version