கரூரை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் விஜய் வரும் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின்போது மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத் திட்ட உதவிகளை நேரடியாக வழங்கவும், கடந்த ஆண்டு ஏற்பட்ட சோக சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபரீதத்திற்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது பாதுகாப்பு காரணங்களால் முதலமைச்சர் விஜய் நேரில் கரூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காணொலி வாயிலாக ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களை மாமல்லபுரத்திற்கு அழைத்து நேரில் சந்தித்து உரையாடினார்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.20 லட்சம் நிதியுதவியை உடனடியாக வழங்கி, அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தினார். மேலும், குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு கூடுதல் உதவிகள் செய்யப்படும் என உறுதியளித்திருந்தார். இந்நிலையில், பலியானோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசுவதற்காக ஜூலை 10, 11 தேதிகளில் முதலமைச்சர் கரூர் வருகை தருகிறார். முன்பு ஜூலை 2-வது வாரம் என்று எதிர்பார்க்கப்பட்ட பயணம் இப்போது உறுதியாகியுள்ளது. கரூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

கரூர் பயணத்தைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். தேர்தல் வெற்றிக்காக மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். இந்தப் பயணம் மக்கள் மன்றங்களுடன் முதலமைச்சரின் தொடர்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version