ஜூன் 11 புனேவில் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த சனிக்கிழமை, கல்வித்துறையில் ஏற்பட்டதாக கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஒரு தனித்துவமான பெயருடைய அரசியல் இயக்கமான ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ போராட்டம் நடத்தியது. NEET வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்தத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் குளறுபடிகள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

இந்த இயக்கத்தை உருவாக்கியவர் மகாராஷ்டிராவின் சாம்பாஜிநகர் நகரைச் சேர்ந்த அபிஜித் தீப்கே. இளைஞர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த இயக்கம், கல்வி அமைப்பில் நிலவும் குறைபாடுகளை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது என கூறப்படுகிறது. அபிஜித் தீப்கே அமெரிக்காவில் கல்வி பயின்று வருபவர் எனவும், இந்த போராட்டத்திற்காக இந்தியா வந்திருந்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் மீண்டும் மகாராஷ்டிராவில் உள்ள தனது இல்லத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த கட்சி, மத்திய கல்வி அமைச்சருக்கு 7 நாட்கள் காலக்கெடு விதித்து, அந்த காலத்திற்குள் பதவி விலக வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், டெல்லியில் நடைபெற்ற போராட்டம் “வெறும் முன்னோட்டம் (டிரெய்லர்)” மட்டுமே எனவும், தொடர்ச்சியான பெரிய அளவிலான இயக்கங்கள் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வரும் ஜூன் 11 ஆம் தேதி மகாராஷ்டிராவின் புனே நகரில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. கல்வி மையமாகக் கருதப்படும் புனேவில் உள்ள சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகம் வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “மகாராஷ்டிராவின் கல்வி தலைநகரமான புனேவில் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி ‘கரப்பான்பூச்சிகள்’ ஒன்று கூட உள்ளன. எத்தனை புனே கரப்பான்பூச்சிகள் இதில் பங்கேற்கப் போகிறீர்கள்?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அபிஜித் தீப்கே தனது சமூக வலைதள பதிவில் “புனேவில் சந்திப்போம்; மகாராஷ்டிராவிற்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், கல்வி துறையைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் மீண்டும் அரசியல் விவாதமாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே இந்த போராட்ட அழைப்பு கவனம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version