2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பாரா தடகளப் பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வீராங்கனை ஷர்மிளா தன்கர் வரலாறு படைத்துள்ளார்.

பெண்களுக்கான ‘ஷாட் புட்’ (குண்டு எறிதல்) F57 பிரிவில் பங்கேற்ற ஷர்மிளா (40), 9.81 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து முதலிடம் பிடித்தார். இந்தச் சீசனில் இது இவரது சிறந்த செயல்பாடாகும். இதன் மூலம் காமன்வெல்த் பாரா தடகளப் பிரிவில் பதக்கம் வெல்வதற்கான இந்தியாவின் 20 ஆண்டு கால காத்திருப்புக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இப்போட்டியில் இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான ஷில்பா ஷைலா 7.26 மீட்டர் தூரம் எறிந்து தனது தனிப்பட்ட சிறந்த சாதனையைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார். தொடக்கத்தில் நைஜீரியாவின் யூச்சாரியா ஐயாசி வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டநிலையில், இந்தியத் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வ மறுஆய்வில், நைஜீரிய வீராங்கனையின் முயற்சி ‘ஃபவுல்’ என அறிவிக்கப்பட்டது. இதனால் நான்காவது இடத்தில் இருந்த ஷில்பாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இரண்டு வயதில் இடது காலில் போலியோ பாதிப்புக்குள்ளான ஷர்மிளா, தடைகளைக் கடந்து விளையாட்டில் சாதனை படைத்து வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ‘ஃபாஸ்ஸா’ சர்வதேச பாரா தடகளச் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளில் 4-வது இடம் பிடித்திருந்த ஷர்மிளா, தற்போது தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version