திண்டுக்கலில் உள்ள பழநி தண்டாயுதபாணி சுவாமி மடத்தின் ரூ.100கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் பக்தர்களுக்கான இலவச வாகன நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலத்தை அபகரிக்க பழநி சார் பதிவாளர் ஜஸ்டீன் மணிகண்டன் முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக நிலத்துக்கு சம்மந்தம் இல்லாத அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ் மூலம் வெள்ளைத்துரை, சேதுபதி ஆகிய இருவருக்கு கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 8-ந்தேதி கிரையப்பத்திரம் செய்து கொடுத்தார்.

இது குறித்து கோவில் கண்காணிப்பாளர் முருகானந்தம் பழநி அடிவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை, உச்சநீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி சொத்தை வில்லங்கப்படுத்தக்கூடாது என பத்திரப்பதிவுத்துறைக்கு தெரிவித்தபோதிலும் மோசடி நடந்துள்ளது. இந்த விஷயத்தில் சார்பதிவாளர் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இனையடுத்து டி.எஸ்.பி. செல்வக்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் பழநி பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருப்பது உறுதியான நிலையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், நிலம் கிரையம் பெற்ற வெள்ளைத்துரை, சேதுபதி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சஸ்பெண்டு செய்து பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி உத்தரவிட்டார். இவர் மீது ஏற்கனவே முறைகேடு புகார் உள்ள நிலையில் தலைமறைவாக உள்ள அவரை கைது செய்யும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதள பக்கங்கள் மற்றும் சில யூடியூப் செய்தி நிறுவனங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. எனவே சமூக வலைதள பக்கங்களில் அமைச்சர் ரமேஷ் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version