தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆதரவு தரும் வகையில் தவெகவின் ஊத்தங்கரை எம்எல்ஏ என். இளையராஜாவுக்கு ₹35 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாகக் கூறப்படும் புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆர்.வி. அசோக் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில் இரு தரப்பினரும் கடுமையான வாதங்களை முன்வைத்தனர். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “இந்த வழக்கில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் முழுக்க முழுக்க கற்பனையானவை. புகார் அளித்த ஊத்தங்கரை எம்எல்ஏவின் தனிப்பட்ட கருத்துகளும் ஊகங்களுமே இதன் அடிப்படை. உண்மையில் எந்தப் பணப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. வெறும் பேச்சு மட்டுமே” என்று வாதிட்டார்.
சபாநாயகர் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களாலும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த வழக்கின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், கரூர் இடைத்தேர்தல் சூழலில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் திட்டமிட்டு இணைக்கப்பட்டதாக சில தமிழ் வார இதழ்கள் செய்தி வெளியிட்டிருப்பதையும் அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
மற்றொரு மூத்த வழக்கறிஞர் பி. குமரேசன், “ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் திமுகவுக்கு வெறும் 59 எம்எல்ஏக்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஒரு எம்எல்ஏவுக்கு ₹35 கோடி கொடுத்து அரசை கவிழ்க்க முயல்வது என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது” என்று விளக்கினார். அப்போது நீதிபதி, புகார் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் குறித்தே என்பதைச் சுட்டிக்காட்டினார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யான், “இது சாதாரண லஞ்ச வழக்கல்ல, ஆட்சியை கவிழ்க்கும் பெரும் சதி. கிண்டி மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை நட்சத்திர ஹோட்டல்களில் ரகசியக் கூட்டங்கள் நடைபெற்றதற்கான சிசிடிவி ஆதாரங்கள் உள்ளன. சில காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன; அவற்றை மீட்டெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மொபைல் டவர்களின் லொகேஷன் விவரங்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணை பெங்களூரு வரை நீண்டுள்ளது. 10 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க திட்டம். எம்எல்ஏவுக்கு ₹35 கோடியும், இடைத்தரகருக்கு ₹5 கோடியும் பேசப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வலியுறுத்தியது. செந்தில் பாலாஜி தரப்பினர், டவர்களின் லொகேஷன் மட்டும் கொண்டு சதி என்று கூற முடியாது என்று எதிர்வாதம் செய்தனர். இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆகியோருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் தினமும் காலை, மாலை காவல்துறை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.
