தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநில நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் பங்கேற்கும் உயர்மட்ட மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், இரண்டு நாட்கள் இந்த மாநாடு நடைபெற உள்ளது. தமிழக அரசின் அனைத்துத் துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அனைவருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் மற்றும் முக்கியப் பொறுப்பு நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் நடைபெறவுள்ள இந்த மாநாடு, மாநிலத்தின் தற்போதைய ஆட்சி நிர்வாகம், சட்டம் – ஒழுங்கு சூழல் மற்றும் அரசின் முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்துதல் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் ஒரு தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
