ஓசூரில் அரசு நிலங்களில் காங்கிரஸ் எம்.பி. கோபிநாத் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த எஸ்.ஜி.நாயஸ் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ஓசூர் சிங்காரவேலு முதலியார் தெருவில் 14 நில உரிமையாளர்களுக்கு சொந்தமான நிலங்களில் தனது குடும்பம் உள்ளிட்ட 50 குடும்பங்கள் வாசிப்பதாகவும், இந்த பகுதியை நேதாஜி சாலையுடன் இணைக்கும் பொது சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். எனவே, பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ராமமூர்த்தி, தங்கள் தெருவிலேயே வசிக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.-வும்,  தற்போதைய எம்.பி.-யுமான கே.கோபிநாத் ஆக்கிரமித்து, இரும்பு கேட் போட்டுள்ளதுடன், கடைகளையும் கட்டியுள்ளார்; பதவி செல்வாக்கையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி, வருவாய் மற்றும் நகராட்சித் துறை அதிகார துஷ்பிரயோகம் செய்து, புறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில் நில அளவை எண் 81 மற்றும் 251 ஆகியவை அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள சந்து என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நில அளவை எண் 110ல் உள்ள நிலத்துக்கு காங்கிரஸ் எம்பி கோபிநாத் பெயரில் உள்ள பட்டா நிலம் என கூறி, நிலம் தொடர்பான அடங்கல் தாக்கல் செய்யப்பட்டது.

காங்கிரஸ் எம்பி கோபிநாத் தரப்பில், நில அளவை எண் 110க்கு உட்பட்ட நிலம் 2006ஆம் ஆண்டு வரை கிராம நத்தமாக இருந்ததற்கான ஆவணப்பதிவுகள் திடீரென திருத்தப்பட்டு அரசு புறம்போக்கு நிலமாக மாற்றப்பட்டுள்ளது; நில அலவை எண் 81 மற்றும் 251 ஆகியவற்றுக்கு உட்பட்ட நிலம், ஆக்கிரமிப்பு என கூறி எடுத்த நடவடிக்கை எதிர்த்து வழக்கு தொடர்ந்தபோது, ஓசூர் மாநகராட்சியின் நடைமுறையில் குறைபாடு உள்ளதாக உயர் நீதிமன்றம் கூறிய நிலையில், தற்போது புதிதாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நில அளவை எண் 110க்கு உட்பட்ட 22 சென்ட் நிலத்துக்கான பட்டா பெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்பி கோபிநாத் கூறும் நிலையில், அந்த பட்டா எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்; அந்த பட்டா எவ்வாறு வழங்கப்பட்டது? உரிய நடைமுறைகளைப் பின்பற்றி வழங்கப்பட்டதா? என்பது குறித்த ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு காங்கிரஸ் எம்பி கோபிநாத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும்; இந்த நடைமுறைகளை மூன்று மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

நில அளவை எண் 81 மற்றும் 251 ஆகியவை அரசு புறம்போக்கு நிலங்கள் என்பதும், தற்போது அவை காங்கிரஸ் எம்பி கோபிநாத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளன என்பதும் ஆவணங்கள் மூலம் உறுதியாவதால், அந்த நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற சட்டப்படியான நடவடிக்கையை எடுக்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version