வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.29 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களின் காரணமாக, வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றிற்கு ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ரூ. 928.50-ல் இருந்து ரூ.957.50-ஆக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. டெல்லியில் ரூ.913.00-ல் இருந்து ரூ.942.00-ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல் சூழல் காரணமாக, எரிசக்தி விநியோகச் சங்கிலியில் (Supply Chain) பெரும் இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இது உலகளவில் எரிபொருள் தட்டுப்பாட்டையும் விலை உயர்வும் உருவாக்கியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ளப்படும் இரண்டாவது விலை உயர்வு இதுவாகும். கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 60 உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், தற்போது சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளது. கடந்த மாதம் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது சமையல் எரிவாயு விலை உயர்வும் சேர்ந்து, ஒட்டுமொத்தப் பணவீக்கத்தை அதிகரிக்கும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
