சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில் தொடங்கியது. சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் கொளத்தூர் வாக்கு எண்ணிக்கை மைய இயந்திரம் சரிபார்ப்பு நிகழ்வில் உள்ளதால், அவருக்கு பதிலாக ஷ்ரேயா பி சிங் பங்கேற்று உள்ளார். இக்கூட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர்கள் குறைந்த அளவிலேயே வருகை தந்தனர்.
தவெக அரசு பொறுப்பேற்ற பின்பு நடைபெறும், இரண்டாவது மாமன்ற கூட்டம் இது. தவெகவை சேர்ந்த 4 மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. இந்த கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, “ திமுகவை பலவீனப்படுத்த முயற்சிக்கும் திமுக கூட்டணியில் இருந்து போனவர்களின் முயற்சி பலிக்காது. திமுக எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தமிழ்நாட்டின் வரலாற்றில் பிண்ணி பிணைந்துள்ளது.
“சங்கு சுட்டாலும் மேன்மை தரும்” அது போல திமுக தன்னுடைய கொள்கைகளில் இருந்தும் சமரசம் செய்து கொள்ளாமல் என்றென்றும் மக்கள் மனதில் நீக்கமற நிலைத்திருக்கும். மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அஞ்சாமல் மக்கள் பணிகள் தொடரும்.
தமிழ்நாட்டில் அதிகாரத்தை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டுள்ளார்கள் என செய்திகளில் வெளியிடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாடு தலைநிமிர்ந்தது என மத்திய அரசின் நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உட்கட்டமைப்பு, வணிக சூழல், வளம், நிதிநிலை மேலாண்மை, சுற்றுச்சூழல் என அனைத்து நிலைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்துள்ளது. முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்தது.
முதலீட்டுக்கு உகந்த வணிக சூழல், மின் வசதியும் இருந்ததாக கூறப்பட்டது. தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர்ந்ததற்கு திராவிட மடல் அரசுதான் காரணம் என பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி விளையாட்டு துறையில் ஆற்றிய பங்கு அளப்பரியது. அவரது சீரிய முயற்சியில் விளையாட்டு துறை எண்ணற்ற பல சாதனைகளை படைத்தது.
தமிழ்நாடு அரசு “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் அறிவித்துள்ளது. 2006 முதல் 2011 வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகு தமிழ் பெயர் சூட்டினால் மாநகராட்சி சார்பில் தங்க மோதிரம் பரிசாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 2014 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தன் கரங்களால் அழகு தமிழ் பெயர் சூட்டிய குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார்” எனக் கூறினார்.
