கோவை நகரின் பரபரப்பான தண்ணீர் பந்தல் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் பல மாதங்களாக மெதுவான வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி தோண்டப்பட்ட ஆழமான குழியில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் விழுந்து பலத்த காயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் போது பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்களிடையே கடும் கோபத்தைத் தூண்டியுள்ளன. தண்ணீர் பந்தல் பிரதான சாலையில் ரயில்வே மேம்பாலத்துக்கான அஸ்திவாரப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலையின் நடுப்பகுதியில் பல இடங்களில் ஆழமான குழிகள் தோண்டப்பட்டு, இரும்புக் கம்பிகளும் சிமெண்ட் கட்டமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன. இரவு நேரம் உள்ளிட்ட எந்த நேரத்திலும் வாகனப் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் எவ்வித எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளோ, பாதுகாப்புத் தடுப்புகளோ அமைக்கப்படாமல் பணிகள் அலட்சியமாக மேற்கொள்ளப்பட்டதே விபத்துக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சம்பவத்தன்று, தனது சைக்கிளில் வழக்கம் போல் சென்று கொண்டிருந்த முதியவர், திடீரென முன்னால் இருந்த ஆழமான குழியை கவனிக்கத் தவறி, சைக்கிளுடன் உள்ளே விழுந்தார். குழிக்குள் இருந்த கூர்மையான இரும்புக் கம்பிகள் மற்றும் சிமெண்ட் தொகுதிகள் அவருக்கு தீவிர காயங்களை ஏற்படுத்தின. உடனடியாக அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் ஓடிவந்து, குழிக்குள் இறங்கி மீட்டு மருத்துவ உதவிக்காக அனுப்பினர். ஆனால், விபத்து நடந்த சில நிமிடங்களுக்குள் ஒப்பந்ததாரர் தரப்பினர் அவசரமாக ஓடிவந்து, அந்த இடத்தில் பாதுகாப்புப் பலகைகளை வைக்கும் பணியில் ஈடுபட்டதைப் பார்த்த பொதுமக்கள், “விபத்து ஏற்பட்ட பிறகு மட்டும் நாடகம் ஆடுகிறார்கள்” எனக் கொதித்தெழுந்தனர்.

மேலும், படுகாயம் அடைந்த முதியவருக்கு ஒப்பந்ததாரர் தரப்பில் இருந்து இதுவரை எந்த மருத்துவ உதவியோ அல்லது நிதி உதவியோ வழங்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.கோவை முழுவதும் நடைபெறும் பல மேம்பாலப் பணிகளிலும் இத்தகைய பாதுகாப்பு அலட்சியம் தொடர்ந்து வருவதாகவும், இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், கோவை மாநகராட்சியும் உடனடியாக தலையிட்டு, பொறுப்பற்ற ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத கட்டுமானப் பணிகள் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் நிலையில், அதிகாரிகள் உரிய கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version