மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீன் சக்கரவர்த்தியின் சமூக வலைதள பதிவு புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் தமிழகத்துக்கான காலியாக உள்ள இடத்துக்கு தவெக போட்டியியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த இடத்தை தங்களுக்கு விட்டுத்தர கோரியது காங்கிரஸ் கட்சி. அந்த கோரிக்கையை விஜய் ஏற்றுக்கொண்டதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தேசிய தரவுப் பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் (தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம்) முதல் எம்.பி. வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாக கருதுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தனது மீது நம்பிக்கை வைத்த ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து, நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக செயல்படுவேன் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “புதிய கூட்டணியின் சார்பில் தாம் வேட்பாளராக நிறுத்தப்பட்டதாக கூறி, அதில் சிபிஎம் பெயரையும் பிரவீன் சக்கரவர்த்தி சேர்த்திருப்பது முற்றிலும் தவறானது. கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கோரியோ எங்களை யாரும் அணுகவில்லை. தவெக அரசுக்கு எங்கள் ஆதரவு எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது. பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த பதிவு ‘அதிகப் பிரசங்கித்தனம் என்றே சொல்ல வேண்டும்” என விமர்சித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு
இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ) இதேபோன்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் இன்னும் திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம். பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக மட்டுமே தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தோம். தவெக தலைமையிலான எந்த புதிய கூட்டணியிலும் நாங்கள் இல்லை. அது தொடர்பாக எங்களிடம் யாரும் கேட்கவில்லை” என்று கூறியுள்ளார்.
மாநிலங்களவை வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து, தவெக – காங்கிரஸ் உறவு மேலும் வலுப்பெற்று வருவதாகக் கருதப்படும் சூழலில், பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு இடதுசாரி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது, தவெக அரசின் எதிர்கால நிலைத்தன்மைக்கு ஒரு வித அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.
