பொதுமக்கள் முன்னிலையில் பழைய வாகன இன்ஜின் ஆயிலை மளமளவெனக் ஒருவர் குடித்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசித்திர செயல் சபரிமலைக்கு தொடர்ந்து மாலை அணிந்து வரும் ஒரு பக்தரால் நிகழ்த்தப்பட்டது.

கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமார் (48) இந்த சம்பவத்தின் மையம். ஆண்டுதோறும் சபரிமலை யாத்திரைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்ட இவர், நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஒரு தேநீர் கடையில் டீ அருந்தினார். அதன் பின்னர், தனது பாக்கெட்டிலிருந்து ஒரு பாட்டில் பழைய இன்ஜின் ஆயிலை எடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் வேகமாகக் குடித்தார்.

இக்காட்சியைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனனர். சிலர் உடனடியாக அவரைச் சுற்றி வளைத்து விசாரித்தனர். அப்போது குமார் அமைதியாக, “நான் கடந்த 22 ஆண்டுகளாக தினமும் இந்தப் பழைய இன்ஜின் ஆயிலைத்தான் குடித்து வருகிறேன். மெக்கானிக் கடைகளுக்குச் சென்று வாங்கிக் கொள்வேன். எனக்கு சாதாரண உணவுகள் எதுவும் செரிக்காது, உடல் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. எனவே உணவைத் தவிர்த்துவிட்டு, அவ்வப்போது டீ குடிப்பேன். மற்ற நேரங்களில் இந்த ஆயில்தான் எனது உணவு” என்று தெரிவித்தார்.

இந்தப் பழக்கத்தால் அவரை அவரது பகுதியினர் ‘ஆயில் குமார்’ என்று அழைப்பதாகவும் அவர் கூறினார். இருப்பினும், இத்தகைய நீண்டகாலப் பழக்கம் அரிய உளவியல் பிரச்னை அல்லது உடல்நிலை தொடர்பான அசாதாரண மாற்றத்தின் விளைவாக இருக்கலாம் என மருத்துவ வட்டாரங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

வாகன இன்ஜின் ஆயிலில் காரீயம் உள்ளிட்ட ஆபத்தான நச்சு இரசாயனங்கள் அதிக அளவில் உள்ளன. இவை உடலுக்குள் சென்றால் நீண்டகாலத்தில் சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம் உள்ளிட்டவற்றுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் எவரும் இத்தகைய உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் ஓசூர் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version