முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

முந்தைய திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யக் கோரியும் எ.வ. வேலு தாக்கல் செய்த மனுக்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு  இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த எ.வ. வேலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி தனது கட்சிக்காரர் லஞ்ச ஒழிப்புத் துறை முன் ஆஜராகி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்துள்ளதாகவும், எனவே லுக் அவுட் நோட்டீஸை தொடர வேண்டிய அவசியமில்லை என்றும் வாதிட்டார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பதில்மனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 14 வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, புலன் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்றும், தேவையெனில் எ.வ. வேலுவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு தொடர்பாக எ.வ. வேலுவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவை ஆகஸ்ட் 14 வரை நீட்டித்த நீதிபதி, அவருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸையும் ரத்து செய்தார். இருப்பினும், வெளிநாடு செல்ல வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தின் முன்அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

இதற்கிடையில், எ.வ. வேலு தாக்கல் செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரும் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அதற்கு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version