சன் டிவி நெட்வொர்க்கிற்கு சொந்தமான 24 மணி நேர தமிழ் நகைச்சுவை தொலைக்காட்சி சேனல் ஆதித்யா டிவி ஆகும். இது நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படக் காமெடி காட்சிகளை ஒளிபரப்பி வருகிறது.
இந்த நிலையில் ஆதித்யா டிவி சேனலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரை இழிவுபடுத்தும் வகையில் ஆதித்யா டி.வியில் சித்தரிக்கப்பட்டதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அவரது அறிக்கையில்…
விடுதலைப் போராட்ட வீரர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர் வ.உ.சிதம்பரனார். இதனால் அவர் “கப்பலோட்டிய தமிழன்” என்ற பெயரைப் பெற்றார். சிறையில் செக்கிழுத்தது உட்பட பல அடக்குமுறைகளைச் சந்தித்தவர். எனவே, தமிழக மக்களால் “செக்கிழுத்த செம்மல்” என்று போற்றப்படுபவர்.
ஆதித்யா டி.வி சேனல் நகைச்சவை நிகழ்ச்சி என்ற பெயரில் வ. உ. சி. போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்தது கண்டனத்திற்குரியது. ஆதித்யா டி.வி நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி தயாரப்பாளர்கள் இதற்குப் பொறுப்பேற்று தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
தேசபக்தர்களை, விடுதலைப் போராட்ட வீரர்களை கண்ணியமான முறையில் ஊடகங்கள் முன்வைக்கவேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
