அதிமுகவின் ஒரு பிரிவு எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெக பெற்றால், அவர்களுக்கு வழங்கும் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக ச.ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சட்டபேரவையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தின்போது, யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு தங்கள் ஆதரவை வழங்கினர். இதனால் அதிமுக இரு பிரிவாகி அவர்களுக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஒரு பிரிவு அதிமுகவைச் சேர்ந்தர்களையும் தவெகவின் கூட்டணியில் இணைத்து அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்னும் கருத்து பரவி வருகிறது.
இந்த நிலையில், அதிமுகவின் ஆதரவை தவெக பெறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மீண்டும் ஒரு தேர்தலை தமிழகம் சந்திக்கக் கூடாது என்பதற்காகவும், கொல்லைப்புற வழியாக பாஜக மற்றும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும்தான் 108 இடங்களை வென்ற தவெக ஆட்சி அமைக்கவேண்டும் என்பதற்காக வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், அதிமுகவின் ஆதரவைப் பெறுவது என்பதோ, அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது என்பதோ மக்களின் தீர்ப்புக்கு எதிரானது. விஜய் சொல்லியிருக்கிற நல்லாட்சி என்பதற்கு விரோதமாக இது அமையும்.
ஏற்கனவே அதிமுக, திமுக அணி இரண்டுக்கும் எதிராகத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
அத்தகைய அணியின் ஆதரவினைப் பெற்று தவெக ஆட்சியில் தொடர்வது என்பது, மக்களுடைய தீர்ப்புக்கு விரோதமாக அமையும். நிச்சயமாக, அத்தகைய நிலைக்கு அவர்கள் செல்லமாட்டார்கள் என நம்புகிறேன் எனக் கூறினார்.
மீறி அவர்கள் அதிமுகவின் கோஷ்டியை சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைப்பது என்கிற முடிவுக்கு தவெக செல்லுமானால் நிச்சயமாக தவெகவுக்கு நாங்கள் அளித்துவரும் ஆதரவு குறித்த முடிவை மறுபரிசீலனை செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.
சிபிஎம் கட்சியின் இந்த முடிவால், தற்போது தமிழக அரசியல் அரங்கில் லேசான அதிர்வு ஏற்பட்டுள்ளது.
