தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சிகள் இப்போதிலிருந்தே ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு ஊரிலும் மாநாடுகள் நடத்தி வாக்கு சேகரிப்பதுடன், நிர்வாகிகளுடன் கூட்டங்களை நடத்தி ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர் கட்சி தலைமையினர்.
அந்த வகையில், கிறிஸ்துவ வன்னியர்கள் நடத்தும் மாநில மாநாடு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் மேட்டுப்பட்டியில் நடைபெற்றது. எம்.பி.சி உரிமியை கிறிஸ்துவ வன்னியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில், திண்டுக்கல், மதுரை, கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ வன்னியர்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள், அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர்.
இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பங்குத்தந்தை ஜோசப் ராஜ் பேசுகையில், ”கடந்த 2021 தேர்தலின் போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பிரச்சாரத்திற்காக வந்திருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றால் கிறிஸ்தவ வன்னியர்களுக்கு எம்.பி.சி பட்டியல் கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார், ஆனால் தற்போது 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வாக்குறுதியை மறந்து விட்டு நீங்கள் கிறிஸ்தவர்கள் என பிரித்துப் பார்க்கிறார்” என குற்றம்சாட்டினார்.
”கிறிஸ்தவ வன்னியர்களின் வாக்கு மட்டும் இனிக்குது, சலுகை கேட்டால் கசக்குதா? உனக்கு நான் வரி கட்டுகிறேன், உனக்கு நான் வேர்வை சிந்துகிறேன், என்னுடைய ஈரக் கொலையை பிடித்து வாட்டுகிறாய், அனைத்தையும் பெற்றுக்கொண்டு எனது உரிமையை மட்டும் கேட்டால் நீங்கள் கிறிஸ்தவர்கள் எனக் கூறி நடந்து கொள்கிறாயே இது சரியா ? நீ ஒன்றும் எங்களுக்கு பிச்சை போட தேவையில்லை” என சாடினார்.
”போன முறை கூட்டணியில் நாங்கள் ஓட்டு போட்டதால் தான் நீங்கள் ஜெயித்தீர்கள். பிஜேபி அதிமுக ஒரு புறம் இருக்க திமுக கூட்டணி ஒருபுறம் இருக்க நடுவில் ஜோசப் விஜய் என்று கிறிஸ்தவர் ஒருவர் வருகிறார் புரிந்து கொள்ளுங்கள்” என கூறினார். 5,000 கிறிஸ்துவ வன்னியர்கள் கூடியிருந்த மாநாட்டில் பாமகவுக்கு ஆதரவாக பேசாமல், விஜய்க்கு ஆதரவு தெரிவித்து பங்குதந்தை பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
