சென்னையில் திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் கேஸ் பலூன் சிலிண்டர் வெடித்ததில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா தற்போது கில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல்வேறு இடங்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள மில்லில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் கில்லர் படப்பிடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (ஜூன் 3) அதிகாலை 3.30 மணியளவில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த போது அங்கிருந்த கேஸ் பலூன் சிலிண்டர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றி வந்த மதுரவாயல் பகுதியை சேர்ந்த மதன் (26) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குன்றத்தூரை சேர்ந்த சக்திவேல் (27), மதுரவாயலை சேர்ந்த சூர்யா (23), நெற்குன்றம் பகுதியை சேர்ந்த தினகரன் (24) ஆகிய 3 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

உடனடியாக அருகில் இருந்த சக ஊழியர்கள் அவர்களை மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மதனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த சூர்யா, தினகரன், சக்திவேல் ஆகிய 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version