கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதலமைச்சருமான டி.கே. சிவக்குமார் ஜூன் 3-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

பெங்களூருவில் உள்ள லோக் பவனில் இருக்கும் கண்ணாடி மாளிகையில் (Glass House) ஜூன் 3-ம் தேதி இதற்கான விழா நடைபெறுகிறது. இந்த தகவலை மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஜி.சி. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த சித்தராமையா, மே 28-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிடத்தின் ஆலோசனையின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பதவியேற்பு விழாவை ஆடம்பரமாக நடத்தாமல், மிக எளிமையான முறையில், சேவை மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளது. பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, முதற்கட்டமாக 8 முதல் 10 அமைச்சர்கள் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 18-ம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலங்களவை தேர்தலுக்குப் பிறகு, கூடுதல் அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்ற பிறகு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகர்களுக்கும் சென்று பொதுமக்களின் ஆசிகளைப் பெற டி.கே. சிவக்குமார் திட்டமிட்டுள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதில் இருந்து, இந்த ஆட்சி மாற்றம் குறித்த எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், தற்போது டி.கே. சிவக்குமார் கர்நாடகாவின் 25-வது முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version