இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற நடனக் கலைஞராகவும், பல்துறை நடிகையாகவும் திகழ்ந்த மறைந்த நாட்டியப் பேரொளி பத்மினிக்கு இன்று 94-வது பிறந்தநாள்.
புகழ் பெற்ற பரதநாட்டியக் கலைஞர்களான பத்மினி, அவரது அக்கா லலிதா மற்றும் தங்கை ராகிணி ஆகிய மூவரும் இணைந்து ‘திருவாங்கூர் சகோதரிகள்’ என்று இந்திய திரையுலகால் புகழப்பட்டனர்.
தமிழ் சினிமாவின் மூவேந்தர்களாகக் கருதப்பட்ட எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகிய மூவருடனும் ஒரே காலகட்டத்தில் மாறி மாறி ஜோடியாக நடித்துப் புகழ்பெற்ற ஒரே நடிகை பத்மினி மட்டுமே.
வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் நடனப் போட்டியில் வைஜெயந்திமாலாவுடன் இணைந்து பத்மினி ஆடிய நாட்டியக் காட்சி இன்று வரை மறக்கமுடியாதது ஆகும்.
திருவனந்தபுரத்தை சொந்தஊராகக் கொண்ட பத்மினி தனது நான்கு வயதில் நாட்டியம் பயிலத் தொடங்கியவர், 10 வயதில் அறங்கேற்றம் செய்ததோடு, 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் நாட்டியப் பேரொளியாக வலம் வந்தார்.
17 வயதில் இயக்குநர் உதயசங்கரால் கல்பனா என்னும் இந்திமொழிப் படத்தில் பத்மினி சகோதரிகள் நடித்தனர். கன்னிகா என்னும் திரைப்படமே இவர்கள் நடனமாடி வெளியான முதல்படமாகும்.
கதையின் நாயகியாக வாழ்க்கை திரைப்படத்தில் தொடங்கிய இவரது நடிப்புப் பணியில், பவளக்கொடி, சந்திரிகா, தூக்குத் தூக்கி, உத்தமபுத்திரன்,தில்லானா மோகானாம்பாள் என 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜியுடன் 59 படங்களில் நடித்துள்ளார்.
தனது நடிப்புக்காக திரைப்பட ரசிகர் சங்கத்தின் சிறந்த நடிகைக்கான விருதினை 4 முறையும், தமிழ்நாடு அரசின் கலைமாணி விருது, மாஸ்கோ இளைஞர் விழாவில் சிறந்த பரதநாட்டியக் கலைஞர் விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளார். பத்மினி 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்து கொண்ட பத்மினி 1977இல் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் குடியேறினார். அங்கு பத்மினி ஸ்கூல் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்து வந்தார். கடந்த 2006ஆம் செப்டம்பர் 24ஆம் தேதி சென்னையில் அவர் மாரடைப்பால் காலமானார். சோவியத் ஒன்றியம் நடிகை பத்மினிக்கு அஞ்சல் தலை வெளியிட்டுக் கௌரவித்தது.
