தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் அரசின் பதவிக்காலம் நிறைவடையும் போது, மாநிலத்தின் மொத்தக் கடன் சுமை சுமார் 15 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதலாவது மாநில மாநாட்டில், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்து அண்ணாமலை பேசினார்.
தற்போது தமிழகத்தின் நேரடிக் கடன் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பொறுப்புகளையும் சேர்த்தால் மொத்தக் கடன் சுமை 13.18 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மாநிலத்தின் மொத்த வருவாயில் சுமார் 22.8% நிதி, வாங்கிய கடன்களுக்கான வட்டியைச் செலுத்துவதற்கே செலவிடப்படுவதாகவும், இது மிகவும் அபாயகரமான நிதி நெருக்கடியைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது சராசரியாகத் தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கடன் சுமை ஏறி நிற்பதாக அவர் கூறினார்.
தவெக அரசு இந்தாண்டு 85 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கும் சூழல் உருவாகும் என்றும் இந்த அரசின் ஆட்சிக் காலம் நிறைவடையும் போது தமிழகத்தின் மொத்தக் கடன் சுமை 15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து நிற்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். அனுபவமற்றவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளதால், உடனடியாக தவெக அரசை விமர்சிக்காமல் குறிப்பிட்ட காலம் அவகாசம் தந்து அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தவெக அரசுக்கு ஓராண்டுக்கு கோரிக்கைகளை மட்டுமே வைப்போம் என்றும் அதன்பிறகு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
என் மண், என் மக்கள் தொழிற்சங்க பேரவை தொடங்கி உள்ளதாகவும், அதில் பலர் இணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அடுத்த 6 மாதங்களுக்கு மரம் நடுதல், நதிகளை தூய்மைப்படுத்துதல் என 6 முக்கிய பிரச்சனைகளுக்கு களமாட உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
ஜூலை 26ம் தேதி திருச்செந்தூரில் அடுத்த மாநாடு நடைபெற உள்ளதாக அண்ணாமலை குறிப்பிட்டார். பாஜகவின் பி டீம் என திமுகவுக்கு சந்தேகம் இருப்பதாகவும், திமுக செய்யும் அற்ப அரசியலை ஒருபோதும்தான் செய்யப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். சாதி மதத்தை வைத்து அரசியல் செய்தது போதும் என்று கூறிய அண்ணமாலை, மதத்தை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வெளியே வந்து அரசியல் செய்வோம் என்று கேட்டுக் கொண்டார்.

