முதலமைச்சர் விஜய்யின் உத்தரவையடுத்து, காவல் அதிகாரிகளுடன் தினமும் 2 மணி நேரம் டிஜிபி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை உறுதி செய்யவும், குற்றச் செயல்களை தொடக்கத்திலேயே கிள்ளியெறியவும், தமிழகக் காவல் துறையில் மிக முக்கிய மாற்றங்களை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தினசரி 2 மணி நேரம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, கள நிலவரங்களைக் கேட்டறிய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அண்மைக்காலமாக ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார். காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
டிஜிபி தலைமையிலான உயரதிகாரிகள், தினசரி 2 மணி நேரம் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அதில் மாவட்ட வாரியான குற்றச்சம்பவங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காவல் நிலையங்களின் செயல்பாடு, நிலுவையில் உள்ள வழக்குகள், மற்றும் சட்டவிரோதச் செயல்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் உடனுக்குடன் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காவல் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்வதையும், புகார்கள் மீது துரிதமான நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
ரவுடிகள், கஞ்சா விற்பனையாளர்கள் மற்றும் சமூக விரோத சக்திகள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையின் மூலம் காவல் துறைக்கும், அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு வலுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுவதில் எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்குத் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
