நடிகர் கார்த்தி அடுத்தடுத்து பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவரது இரு முக்கிய திட்டங்களான ‘சர்தார் 2’ மற்றும் ‘மார்ஷல்’ படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக பிரபல இயக்குநர் மோகன் ராஜாவுடன் இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

2022-ல் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘சர்தார்’ படத்தின் தொடர்ச்சியாக ‘சர்தார் 2’ உருவாகி வருகிறது. கார்த்தி இதில் இருவேடங்களில் நடிக்கிறார். மாளவிகா மோகனன், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் இணைந்துள்ளனர். இந்த அதிரடி உளவுத் திரில்லர் படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதைத் தொடர்ந்து கார்த்தியின் 29-வது படமான ‘மார்ஷல்’ படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ‘டாணாக்காரன்’ புகழ் இயக்குநர் தமிழ் இயக்கும் இத்திரைப்படம் 1960-களின் ராமேஸ்வரம் பின்னணியில் அமைந்த கடல் சார்ந்த ஆக்‌ஷன் டிராமாவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாகவும், ஆதி வில்லனாகவும் நடிக்க, சத்யராஜ், பிரபு, லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர். சாய் அப்யங்கர் இசையமைக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இரு கட்டப் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், மீதமுள்ள பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் பெயரிடப்படாத மற்றொரு படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். மீனாட்சி சவுத்ரி இதில் ஜோடியாக நடிக்க, சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இந்நிலையில் கார்த்தியின் 31-வது படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. மோகன் ராஜா இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லட்சுமணன் குமார் தயாரிக்கும் இத்திரைப்படம் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகவுள்ளது.

ஜெயம், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம், தனி ஒருவன் போன்ற வெற்றிப் படங்களைத் தந்த மோகன் ராஜாவுடன் கார்த்தி முதன்முறையாக இணைகிறார். இயக்குநரின் சொந்தக் கதையில் உருவாகும் இப்படத்தின் பூஜை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணி சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version