தமிழ்நாட்டில் தவெக ஆட்சி நடைபெறும் நிலையில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் என்று விமர்சித்த திமுக, தவெக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்வியை மறைக்க இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த ஜூன் 20-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்தூர் தவெக நகரச் செயலாளர் செல்வம் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு இடமளிக்காமல் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த இந்த மனுவில் இரு தரப்பு வாதங்களும் நீண்ட நேரம் நடைபெற்றன. அனிதா தரப்பு இது அவதூறு வழக்கு மட்டுமே என்றும், வழக்குப் பதிவு செல்லாது என்றும் வாதிட்டது. அரசு தரப்போ, மூன்று முறை அமைச்சராகவும் ஏழு முறை எம்எல்ஏவாகவும் பதவி வகித்தவர் பொறுப்புடன் பேசியிருக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தது.
வாதங்களை கேட்ட நீதிபதி, “1967-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டை சினிமா பின்னணியைச் சேர்ந்தவர்களே ஆட்சி செய்கின்றனர். மக்களே அவர்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்தனர். ஒரு எம்எல்ஏ சாதாரண குடிமகன் அல்ல; அவர் ஏன் இப்படி பேச வேண்டும்?” என்று கேள்வி எழுப்பி முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களுக்குள் போலீசார் அனிதாவை கைது செய்தனர்.
தவெக ஆட்சியில் கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் அமைச்சர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. இந்த சம்பவத்துக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கொள்கைப் பரப்பு செயலாளர் எழிலரசன், “தவெக ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை திசைதிருப்பும் வகையில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்ஜாமீன் மறுக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் அராஜகமான முறையில் கைது நடைபெற்றது” என்று விமர்சித்தார்.
மேலும், “முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு முன்பே குதிரைப் பேரத்தை தொடங்கிவிட்டார். தற்போதும் அது தொடர்கிறது. தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் விஜய்தான் என்றாலும், பின்னணியில் இருந்து இயக்குபவர் ‘ஆக்டிங் முதலமைச்சர்’ ஆதவ் அர்ஜுனாதான்” என்று எழிலரசன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இதே கருத்தை வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ மீதான புகாருக்கு நடவடிக்கை எடுக்காத நிலையில், எதிர்க்கட்சியினர் மீது மட்டும் பொய் வழக்குகள் போடுவதாகவும், வரும் இடைத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் திமுகவின் தேர்தல் பணிகளை முடக்க இத்தகைய சதி நடைபெறுவதாகவும் எழிலரசன் தெரிவித்தார். இந்த சம்பவங்கள் தமிழ்நாட்டு அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
