திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகள் தொடங்க லஞ்சம் வாங்கப்பட்டது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டி வரும் நிலையில், அது உண்மைதான் என்பதுபோல், திமுக ஆட்சியில் தனது பள்ளி அனுமதிக்கு லஞ்சம் கேட்டார்கள் என ZOHO இயக்குநர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

தான் வெளியிட்ட பள்ளி தொடர்பான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தவெக அரசுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டவை என்றும் திமுக ஆதரவாளர்கள் விமர்சித்து வருவதாக தொழில்நுட்பத் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்த அவர், கலைவாணி கல்வி மையத்தின் கீழ் தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் இலவச NIOS பள்ளிகள் செயல்பட்டு வருவதாக கூறினார்.

தேனி பள்ளி முதலில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவரால் தொடங்கப்பட்டதாகவும், அவர் நடத்திய சிபிஎஸ்இ பள்ளிக்கு மாநில அரசின் NOC பெற அதிகளவு பணம் கோரப்பட்டதால் பள்ளியை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். பின்னர் அந்த அறக்கட்டளையை தாங்கள் பொறுப்பேற்று இலவச பள்ளியை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

மேலும், தேனி பள்ளிக்கு மாநில அரசின் பதிவு இல்லாத காரணத்தால் திமுக ஆட்சியில் அவ்வப்போது நிர்வாக ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், மீண்டும் அரசு அனுமதி பெற முயற்சித்தபோதும் அது பணச் செலவுகளுடன் கூடிய சிக்கலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்காசியில் புதிய பள்ளி கட்டிடங்களை அமைப்பதற்காக DTCP அனுமதி கோரி விண்ணப்பித்தபோதும், திமுக ஆட்சிக் காலத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்றும், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகே அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அனுமதி கிடைத்ததோடு மட்டுமல்லாமல், எந்த அனுமதிக்கும் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளே கூறினர். இதுபோன்ற மாற்றத்தை நான் பொதுவெளியில் பாராட்ட வேண்டியது என் கடமைஎன்று அவர் கூறியுள்ளார்.

தன்னை டிவிகே ஆதரவாளர், பிராமணர், சங்கி என தனிப்பட்ட முறையில் தாக்கி வருவதாக குற்றம்சாட்டிய ஸ்ரீதர் வேம்பு, “நான் தமிழ் வழிக் கல்வியில் படித்தவன். எளிய பின்னணியில் இருந்து வளர்ந்தவன். தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு அடையவும், கிராமப்புற வளர்ச்சிக்காகவும் என் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். இத்தகைய தாக்குதல்களால் நான் பின்வாங்க மாட்டேன்என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “என்னை மிரட்ட முடியாது. மரணத்திற்கே அஞ்சாத நான், திமுகவுக்கு ஏன் அஞ்ச வேண்டும்? மனசாட்சி இருந்தால் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டு என் குணநலனை விமர்சிக்கட்டும்எனவும் ஸ்ரீதர் வேம்பு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அவர் வெளியிட்டிருந்த பதிவில், திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் அருவருப்பூட்டும் அளவுக்கு ஊழல் நிலவியதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது எந்த ரகசியமும் அல்ல; உலகமே அறிந்த உண்மை என்று குறிப்பிட்ட அவர், ஊழல் இமயமலை உயரத்தை எட்டியதாக குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசில் பணியாற்றிய நிதியமைச்சரே ஊழல் குறித்து அதிருப்தி தெரிவித்ததாகவும், அந்த கருத்துகள் வெளியில் வந்த பிறகு அவர் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக மாற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இது கொள்கை சார்ந்த விவகாரம் அல்ல. அப்போது திமுகவுடன் கூட்டணியில் இருந்த கேரள மார்க்சிஸ்ட் தலைவர்கள்கூட திமுகவில் ஊழல் ஆழமாக வேரூன்றியிருந்ததாக கூறியுள்ளனர்என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கேரளாவின் முன்னாள் நிதியமைச்சர் பாலகோபால் போன்ற நேர்மையான பொதுச்சேவையாளர்களை தான் எப்போதும் மதிப்பதாகவும், அவர்களுடன் அரசியல் கொள்கையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர்களின் நேர்மையை மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக உண்மையாகவே சுயபரிசோதனை செய்ய விரும்பினால் முதலில் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதற்கு பதிலாக தன்னை டிவிகே ஆதரவாளர், பிராமணர், சங்கி என தனிப்பட்ட முறையில் தாக்கி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இறுதியாக, திருக்குறள் 423- மேற்கோள் காட்டிய அவர், “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவுஎன்ற வள்ளுவர் வாக்கை நினைவுபடுத்தி, செய்தியை யார் சொல்கிறார்கள் என்பதை விட அதன் உண்மைத்தன்மையைப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version