தமிழக அரசியலில் தவெக ஆட்சி அமைந்த பிறகு திமுகவுடன் கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பேச்சைத் தொடங்கிய ஆர்.எஸ்.பாரதி, “விஜய்க்கு ஒரு ஆபத்து வரப்போகிறது என்றால் அது ஆதவ் அர்ஜுனாவால் தான் வரும். பத்து நாட்களாக அவர் வாய் திறக்கவில்லை. ஏதோ நடக்கிறது” என்று எச்சரித்தார். ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்த பாரதி, அவரை அரசியல் ‘தாவல்’ என்று சாடினார். “புதிய ஹோட்டலுக்கு சென்று ருசி பார்ப்பது போல ஒவ்வொரு கட்சியிலும் சேர்ந்து பார்த்துவிட்டு வருபவர். திமுகவில் கொஞ்ச நாள் இருந்துவிட்டு வெளியேறினார். பின்னர் விசிகவுக்குச் சென்று, இப்போது தவெகவில் உள்ளார். எம்.பி. சீட் கிடைக்காததால் கட்சி மாறினார்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “ஒரு கொட்டும் தேளை வெட்டும் சக்தி திமுகவுக்கு உண்டு” என்றும் தெரிவித்தார். கேரளாவில் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீது 924 கோடி ரூபாய் லாட்டரி மோசடி வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அவரது மனைவி, மாமியார் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு இருப்பதாகவும் பாரதி சுட்டிக்காட்டினார். “பல அமைச்சர்கள் மீதும் வழக்குகள் உள்ளன. அவை தூசி தட்டப்படும்போது நல்ல காலம் வரும்” என்று அவர் கூறினார்.

தவெகவை ‘தாவல் கட்சி’ என்று அழைத்த பாரதி, இரண்டு மாத ஆட்சியிலேயே பெரிய சாதனை செய்துவிட்டதாகக் கூறி பலர் கட்சியில் இணைவதை விமர்சித்தார். குறிப்பாக, தேர்தல் முடிவுகள் வெளியான அதே நாள் காங்கிரஸ் தரப்பில் துண்டு போட்டு இடம் பிடிப்பது போல ஆதரவு அளிக்கப்பட்டதைச் சுட்டினார். “இதில் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

வரலாற்று உதாரணங்களை மேற்கோள் காட்டிய பாரதி, ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்கள் திமுகவை அழிக்க முடியாத நிலையில், புதிதாக உருவான தவெக அதைச் செய்ய முடியாது என்று வலியுறுத்தினார். “ஒரு தோல்வியால் திமுக அழிந்துவிடாது. தொண்டர்களின் பலத்தால் திமுக தாங்கி நிற்கும்” என்று உறுதியுடன் பேசினார்.தமிழக அரசியலில் தொடரும் கட்சி மாற்றங்கள் மற்றும் கூட்டணி துரோகக் குற்றச்சாட்டுகள் மத்தியில் இந்தப் பொதுக்கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version