டெல்லியில் ஜூன் 8-ம் தேதி ‘இண்டியா’ கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணிக்குள் புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது சிபிஎம் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியதற்கு விளக்கம் கேட்டு, சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கேரள தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள், சிபிஎம் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே அரசியல் உடன்பாடு இருப்பதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே ரகசியப் புரிந்துணர்வு இருப்பதாக காங்கிரஸ் பிரசாரம் செய்தது. இதற்கு அதிகாரப்பூர்வமாக விளக்கமளிக்க வேண்டும் என்று எம்.ஏ.பேபி வலியுறுத்தியுள்ளார்.
பாசிச மற்றும் வகுப்புவாத பாஜகவை அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து வீழ்த்துவதற்காகவே ‘இண்டியா’ கூட்டணி உருவாக்கப்பட்டது. தேசிய அளவில் சிபிஎம் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, மாநில அளவில் (கேரளாவில்) அதே கட்சி பாஜகவுடன் கைகோர்த்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுவது, கூட்டணியின் அடிப்படை ஒற்றுமையைக் குலைக்கும் செயலாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களின் இத்தகைய முரண்பாடான குற்றச்சாட்டுகள் மற்றும் பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஜூன் 8 கூட்டத்திற்கு முன்பாகவே காங்கிரஸ் தலைமை தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த விஷயங்களை முறைப்படி தெளிவுபடுத்தாவிட்டால், ‘இண்டியா’ கூட்டணி அமைக்கப்பட்டதன் நோக்கமே முற்றிலும் கேள்விக்குறியாகிவிடும்.
கூட்டணி ஆலோசனைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே, ‘இண்டியா’ கூட்டணியின் முக்கியக் கட்சிகளிடையே அதிருப்தி அலை வீசத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் சில அரசியல் நகர்வுகளால் அதிருப்தியடைந்த திமுக, ஜூன் 8 ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. ஜார்கண்டில் காங்கிரஸ் தன்னிச்சையாக மாநிலங்களவை வேட்பாளரை அறிவித்ததால், அதன் கூட்டணிக் கட்சியான ஜேஎம்எம் (JMM) கடுமையான அதிருப்தியில் உள்ளது.
இந்த வரிசையில் தற்போது சிபிஎம் கட்சியும் காங்கிரஸுக்கு எதிராகக் கடிதம் அனுப்பியிருப்பது, ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்கால உத்திகளில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
