இந்திய அணியின் எதிர்காலத்துக்கான சிறந்த தொடக்க ஜோடி எது என்ற கேள்வி எழுந்துள்ளது. 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் முக்கியக் காரணமாக இருந்தனர். இருப்பினும், அதன்பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்சியின் வருகை, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவை பேட்டிங் வரிசையில் மாற்றங்களைச் செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ‘தொடர் நாயகன்’ விருதை வென்றதன் மூலம், வைபவ் சூர்யவன்சி தொடக்க ஆட்டக்காரர் இடத்தைத் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார்.
அபிஷேக் சர்மா மீது அதிகரிக்கும் அழுத்தம்:
கடைசி 5 இன்னிங்ஸ்களில் அபிஷேக் சர்மா எந்த ஒரு குறிப்பிடத்தக்க ஸ்கோரையும் பதிவு செய்யத் தவறியுள்ளார். உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அவர், தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். குறிப்பாக, சஞ்சு சாம்சன் போன்ற மற்றொரு பேட்ஸ்மேன் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் சூழலில் அழுத்தம் அதிகரித்துள்ளது.
அபிஷேக் மற்றும் சஞ்சு இடையேயான இந்த விவாதத்தில், அபிஷேக்கை அணியிலிருந்து நீக்கும் “கடினமான முடிவை” தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் எடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், “சர்வதேச கிரிக்கெட்டில் உலகக் கோப்பையிலிருந்தே அபிஷேக் சர்மாவின் பலவீனத்தை எதிரணிகள் கண்டறிந்துவிட்டன. எனவே, அவருக்கு எதிராக இப்போது ஒரு கடினமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். அவருக்கு 100% அழைப்பு வரும். தேர்வுக்குழுவினர் ஒரு கடினமான முடிவை எடுத்தாக வேண்டும்” என்றார்.
சஞ்சு சாம்சனின் நிலைப்பாடு:
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சஞ்சு சாம்சன், இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதுமே இருக்கும் ‘எலிப் பந்தயத்தின்’ (Rat Race) ஒரு பகுதியாக தான் இருக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாட விரும்பினாலும், அது தனது சொந்த விதிமுறைகளின்படியே இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நம் நாட்டில் தொடர்ந்து ஒரு எலிப் பந்தயம் நிலவுவதை நான் உணர்ந்தேன். 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பே அதன் ஒரு பகுதியாக இருக்க வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன். நான் விளையாட்டை ரசிக்க விரும்புகிறேன். கடவுளின் அருளால் நான் நிறைய சாதித்துவிட்டேன். எனக்கு இப்போது 31 வயதாகிறது, இன்னும் சில ஆண்டுகளே என்னிடம் உள்ளன. எனவே, என் சொந்த விதிமுறைகளின்படி விளையாட முடிவு செய்துள்ளேன். நான் எப்படி பேட் செய்ய வேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்று யாரும் எனக்குச் சொல்ல மாட்டார்கள். சஞ்சுவுக்கான முடிவை சஞ்சுவே எடுப்பார்” என்று தெரிவித்தார்.

