தனது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், தனக்கு தேசிய விருது கிடைக்காதபோது யாரும் பேசவில்லை என்றும் தற்போது கிடைத்த விருதுக்கு விமர்சனங்களை முன்வைப்பதாகவும் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் வரும் 28ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தனது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தனுஷ் கலந்து கொண்டார். விழாவில், ரசிகர்களின் மத்தியில் பேசிய தனுஷ், தனக்குக் கிடைத்த தேசிய விருதுகள் குறித்த விமர்சனங்களுக்கு உருக்கமாகவும் காட்டமாகவும் பதிலளித்துள்ளார்.
தனக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து தற்போது பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் வெளிவந்த சில திரைப்படங்கள் நிச்சயமாகச் சிறந்த படங்கள் தான் என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வதாகவும் குறிப்பிட்டார். ஆனால், இன்று எனது விருதை எதிர்த்து கிட்டத்தட்ட 90% பேர் பேசுவதாகவும், ‘அது ஒரு கனாக்காலம்’, ‘புதுப்பேட்டை’, ‘வடசென்னை’, ‘கர்ணன்’, ‘மரியான்’ மற்றும் ‘ராஞ்சனா’ போன்ற தனது எண்ணற்ற திரைப்படங்கள் வெளியானபோது, அவற்றுக்கு தேசிய விருது வழங்கப்பட வேண்டும் என்று இவ்வளவு தீவிரமாக யாரும் குரல் கொடுக்க வரவில்லை என்றும் தனுஷ் வருத்தம் தெரிவித்தார். அந்தப் படங்களுக்கு விருது கிடைக்கும் என்று சொன்னார்களே தவிர, கடைசியில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
தனது பல சிறந்த திரைப்படங்களுக்குத் தகுதியான தேசிய விருதுகள் கிடைக்காமல் போனபோது, தற்போது எதிர்ப்பது போல 10% பேர்கூட அதைப் பற்றிப் பேசவோ ஆதரவளிக்கவோ வரவில்லை என்று தனுஷ் தெரிவித்தார். தனக்குக் கிடைத்த இந்த 2 தேசிய விருதுகளும் தானாக அமைந்தவை என்றும் யாரையும் தட்டிவிடாதீர்கள், தட்டிக் கொடுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

