பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அரசியலில் இருந்து விலகுவதாக, அரசியல் துறவறம் செல்வதாக அறிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள வீட்டில் மருத்துவர் ராமதாசின் இல்லத்தில் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
மருத்துவர் அன்புமணி உள்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் ராமதாசை நேரில் சந்தித்து பிறந்ந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரந்தநாள் நிகழ்ச்சியின் போது பேசிய மருத்துவர் ராமதாஸ் அரசியலில் இருந்து தான் துறவறம் செல்வதாகத் திடீரென அறிவித்தார். துறவறம் என்றால் இனிமேல் அரசியல் பேசுவதில்லை, அரசியலில் ஈடுபடுவதில்லை அரசியலில் இருந்து ஓய்வு எனப் பொருள் என்று விளக்கினார்.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சியை தனது மகன் அன்புமணி இனி பார்த்துக் கொள்வார் எனவும் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கு சொந்தம், அதன் மாம்பழம் சின்னம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் புகார்கள் இருதரப்பிலும் அளிக்கப்பட்டிருந்தன.
சட்டமன்ற தேர்தலிலும் கூட அன்புமணி பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிலையில், ராமதாஸ், சசிகலாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார்.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, தந்தை, மகன் இடையே நிலவிய மோதல் போக்கும் மெல்ல மெல்ல சீரான நிலையில், ராமதாசின் திருமண நாளின்போது அன்புமணி தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று பெற்றோரை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது ராமதாஸ் மிகுந்த உணர்ச்சிப் பெருக்கில் மகன் அன்புமணியை ஆரத்தழுவினார்.
இதையடுத்து பாமகவுக்குள் தந்தை, மகன் சார்பில் நிலவிவந்த மோதல்போக்குகள் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்த இன்ப அதிர்ச்சியாக தனது அரசியல் துறவறத்தை அறிவித்துள்ள ராமதாஸ், கட்சியை இனி அன்புமணியே பார்த்துக் கொள்வார் என அறிவித்துள்ளார்.
ராமதாசின் முடிவை பாமகவினர் வரவேற்றுள்ளபோதும், முன்பே தந்தையும் மகனும் ஒருங்கிணைந்திருந்தால், பாமகவுக்குள்ளேயே ஒருவரை யொருவர் தாக்கிக் கொள்ளும் மோதல் போக்குகள் நடந்திருக்காதே, சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி எண்ணிக்கை அதிகரித்திருக்குமே என்கிற ஆதங்கக் குரலும் எழுந்திருக்கிறது.
