பெங்களூருவில் இருந்து கேரளாவுக்குச் சொகுசு காரில் கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான 70 கிராம் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருளை கோவை மாவட்ட காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக 5 பேர் கொண்ட கும்பல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது.
கோவையில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாகத் தடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி உத்தரவின்பேரில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ரகசியத் தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி மேம்பாலப் பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர வாகனத் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்துச் சோதனையிட்டதில், காரின் மறைவான பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 கிராம் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் சிக்கியது. உடனே காரையும் போதைப்பொருளையும் பறிமுதல் செய்த போலீசார், பாலக்காடு மற்றும் கோவையைச் சேர்ந்த அஜ்மல், அபுதாஹிர், பாலாஜி, முகமது அலி ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களது முக்கியக் கூட்டாளியான திருச்சூரைச் சேர்ந்த ஜசீர் (30) என்பவர்தான் பெங்களூருவில் போதைப்பொருளை வாங்கிவரச் செய்து கேரளாவுக்குக் கடத்தத் திட்டமிட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ஜசீீரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். பெங்களூரு, கேரளா மற்றும் தமிழகம் வரை நீண்டிருந்த இந்தப் போதைப்பொருள் கடத்தல் வலையைத் தகர்த்துள்ள காவல்துறையினர், இவர்களுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
