திமுக 40 தொகுதிகளிலும் ராஜினாமா செய்யத் தயாரா? அப்படி செய்தால் நானும் ராஜினாமா செய்ய தயார் என திமுக தலைமைக்கு துரை வைகோ எம்.பி சவால் விடுத்துள்ளார்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தனது அலுவலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது….

வியட்நாமில் ஏற்பட்ட படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. குறிப்பாக திருச்சியை சேர்ந்த பாலாஜி ,அழகுராஜா, ஷேக் அப்துல்லா ஆகிய 3 பேரும் உயிரிழந்த தகவல் கிடைத்ததும் அவர்களின்  உடலை விரைவாக மீட்டு வரவும்,  காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளேன்.

மக்கள் சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்கு முன்பாக அங்கு உரிய பாதுகாப்பு வசதிகள் இருக்கிறதா என கவனிக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடு இல்லையென்றால் அங்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

தவெக விஜய் அரசுக்கு  எம்.எல்.ஏக்களை களவாட வேண்டும் என்று அவசியம் கிடையாது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு   தொகுதிகளுக்கும் சுமார்  20 கோடி, குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதியில் சுமார் 100 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.

234 தொகுதிகளிலும் எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்துள்ளார்கள், ஆனால் அவர்களால் வாக்கு பெற முடியவில்லை, இதனை தொடர்ந்து திமுக,  சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அது மட்டுமல்லாமல், யாருமே நம்ப முடியாத ஒரு சூழ்நிலையை நாம் பார்த்து உள்ளோம்.. அதிமுக- பாஜக – திமுக இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை திமுக உறுப்பினர்கள், அதிமுக உறுப்பினர்கள் என யாரும் ஏற்று கொள்ளவில்லை..

திமுகவுடன் ரகசிய கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுக்கு அதிமுக உடைய உண்மையான நிர்வாகிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதன் அடிப்படையில்தான் பல அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து உள்ளார்கள். மேலும் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என சாரசாரையாக தமிழக வெற்றி கழகத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக  இருப்பவர்கள் இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவெகவின் கொள்கையை ஏற்றுக்கொண்டு சேர்கிறார்கள் என்றார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் தவெக  வெற்றி பெற்றுள்ளார்கள். சாமானிய மக்கள், ஆட்டோ ஓட்டுநர், தண்ணீ கேன் போடுபவர்கள் என சாமானிய மக்கள் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் வெற்றி பெற்றுள்ளார்கள்..

மதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவிற்கு விலை போய் விட்டார்கள்.. இதுபோன்ற செயல்களில் திமுக தான் ஈடுபட்டு வருகிறது.. தவெக அல்ல.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவிலிருந்து 150 ஒன்றிய செயலாளர், பகுதி செயலாளர், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கான பேர் கட்சியை விட்டு விலகி உள்ளார்கள்.இதை குறித்த செய்திகள் ஏன் வெளிவரவில்லை.

திமுகவை மதிக்கிறோம் அண்ணா கண்ட இயக்கம் ,கலைஞர் அவர்களை மதிக்கிறோம்,ஆனால் அக்கட்சியின் மீது இருக்கக்கூடிய நம்பிக்கையை பல தோழர்கள் இழந்து விட்டார்கள்.

திமுக – அதிமுக தலைமை மீது ஒரு நம்பிக்கை இல்லாதது தான் பலர் மாற்று கட்சிக்கு செல்ல கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

திமுக- தவெக ஒரு அணியில்  இருக்க வேண்டுமென திருமாவளவன் கூறியது ஏற்புடையது அல்ல.

அதிமுக – திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது, திமுக அதிமுக பாஜகவுடன் இருக்கிறது, அப்படிப்பட்டவர்கள் எப்படி பாஜகவை எதிர்ப்பார்கள்.

நல்ல எண்ணங்கள் கொண்டவர்கள் சேருவது தவறில்லை, அண்ணாமலையும் – விஜயும் சேர்வது குறித்து  அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

நான் வெற்றி பெற்றதற்கு திமுக தான்  காரணம் என்று சொல்வது பொய்.

நான் வெற்றி பெற்றதற்கு திமுகவின் பங்கு அதிகமாக உள்ளது.. அதே போன்று கூட்டணி கட்சியின் பங்கும் உள்ளது.  திமுக 40 தொகுதிகளிலும் ராஜினாமா செய்ய தயாரா… அப்படி செய்தால் நானும் ராஜினாமா செய்ய தயார்..

தில் இருந்தால்,  தைரியம் இருந்தால் திமுக தலைமை இன்று அறிவிக்கட்டும். நான் ராஜினாமா செய்ய தயார்… மீண்டும் தேர்தலை சந்தித்தால் 40-ம் போய்விடும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version