டெல்லியில் NEET தேர்வு மோசடிகளுக்கு எதிராக ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) நடத்திய போராட்டம் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி இழப்புக்கு வழிவகுத்த நிலையில், அதே மாதிரியான ‘காக்ரோச்’ பாணியில் புதிய இயக்கம் உருவாகியுள்ளது. ‘E20 ஜனதா கட்சி’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த ஆன்லைன் இயக்கம், மத்திய அரசின் எத்தனால் கலந்த பெட்ரோல் கொள்கைக்கு எதிராக வலுவான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.

இந்த இயக்கம் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரது ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் EBP (Ethanol Blended Petrol) திட்டத்தின்படி, பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் 2013-14ல் 1.5%க்கும் குறைவாக இருந்தது. தற்போது 2025-26ல் 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கரும்பு, மக்காச்சோளம், அரிசி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும், இறக்குமதியை குறைத்து பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் அரசு வாதிடுகிறது. ஆனால் E20 ஜனதா கட்சியினர் இந்த கொள்கையை கடுமையாக எதிர்க்கின்றனர். பழைய வாகனங்களில் மைலேஜ் குறைவு, என்ஜின் பாகங்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் குழாய்களில் அதிக தேய்மானம் ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நுகர்வோருக்கு தேர்வு உரிமை வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாகும். புதிய வாகனங்களுக்கு E20, பழைய வாகனங்களுக்கு E10 மற்றும் விரும்புவோருக்கு தூய பெட்ரோல் (E0) ஆகியவை தடையின்றி கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மேலும், அமைச்சர் நிதின் கட்கரியின் குடும்பத்துக்கு மகாராஷ்டிராவில் சர்க்கரை ஆலைகள் உள்ளன என்றும், அவை எத்தனால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனை மறுத்துள்ள கட்கரி, “எங்கள் குடும்பம் பல ஆண்டுகளாக சர்க்கரை ஆலைகளை நடத்தி வருகிறது. இந்திய எத்தனால் உற்பத்தியில் எங்கள் பங்கு 0.5%க்கும் குறைவு. இந்த விவகாரத்தில் அவதூறு பரப்பியவர்கள் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தின் வெற்றியை முன்மாதிரியாகக் கொண்டு தொடங்கப்பட்ட E20 ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கம் வெகு வேகமாக வளர்ந்து 3 லட்சம் பின்தொடர்பாளர்களை தாண்டியுள்ளது. இந்தப் போராட்டம் பிரதமர் மோடி தலைமையிலான NDA அரசுக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version