சென்னை: தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை நேரடியாக ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் விஜய், சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று திடீரென பார்வையிட்டார்.

ஏற்கெனவே எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதி, சேத்துப்பட்டு எரிவாயு உற்பத்தி மையம் மற்றும் நெம்மேலி கடல்நீர் குடிநீராக்கும் திட்டப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், தற்போது தொழில்துறை தேவைகளுக்காக நீர் சுத்திகரிப்பு செய்யும் இந்த முக்கிய நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கோயம்பேடு சுத்திகரிப்பு நிலையம் தினசரி 45 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. மூன்றாம் நிலை சுத்திகரிப்பு முறையில் செயல்படும் இந்த ஆலை, சுத்திகரிக்கப்பட்ட நீரின் தரத்தை சர்வதேச தரநிலைக்கு ஏற்ப பராமரித்து வருகிறது. இதன் காரணமாக, சுத்திகரிக்கப்பட்ட நீர் வாகனங்கள் சுத்தம் செய்ய, ரயில் பெட்டிகள் கழுவ, வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது நகரத்தின் குடிநீர் தேவையை குறைப்பதோடு, நிலத்தடி நீர் பாதுகாப்புக்கும் பெரிதும் உதவுகிறது.

முதலமைச்சர் விஜய், சுத்திகரிப்பு செயல்முறை, நீர் தரக் கட்டுப்பாடு, உற்பத்தித் திறன் மற்றும் மறுசுழற்சி அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார். மேலும், திட்டத்தின் செயல்பாட்டில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார். சென்னை போன்ற பெருநகரங்களில் நீர் மேலாண்மை மற்றும் மறுசுழற்சி திட்டங்கள் முக்கியத்துவம் பெறும் நிலையில், முதலமைச்சரின் இந்த நேரடி ஆய்வு அரசு இயந்திரத்துக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

இத்தகைய தொடர் ஆய்வுகள் மூலம் அரசு திட்டங்களை மக்கள் நலனுக்கு ஏற்ப செயல்படுத்த முதலமைச்சர் விஜய் உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version