மின் வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மின்வாரிய ஊழியர்க்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் 34 ஹார்டு டிஸ்க்குகள் திருட்டுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பெரிய சதி திட்டம் இருப்பதாகவும், முக்கியமான தகவல்களை அழிப்பதற்காக இந்த ஹார்டு டிஸ்க்குகள் திரு டப்பட்டிருக்கலாம் என்று புகார் எழுந்தது.
இந்த திருட்டு தொடர்பாக சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்துறை முதலில் வழக்குப்பதிவு செய்து பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர்களை மேற்பார்வையிடும் ஊழியராக பணியாற்றி வந்த கோபிநாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தபட்ட விசாரணையில் ஹார்டு டிஸ்க்குகளை பெங்களூரு உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்டது. தெரியவந்தது.
இந்த வழக்கில் ஜாமின், கோரி கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கடந்த ஜூன் 5-ந்தேதி முதல் சிறையில் உள்ளார். இவருடன் கைதானவர்களுக்கு ஏற்கனவே சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது என வாதிடப்பட்டது.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர் கோபிநாத்துக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். காவல்துறை விசாரணை முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விசாரணை அதிகாரி முன் தினமும் காலை ஆஜராகி கையொப்பம் இட வேண்டும் என நிபந்தனை விதித்தார்.
